முதுமை, சற்று முகத்தில் தெரிந்தாலும் பாடும் குரலில் வசீகரத்தில் இன்னும் இளமை குறையவில்லை. பக்தி பாடல்களை பரவசத்துடன் பாடி, மெய்சிலிர்க்க வைக்கிறார் பெங்களூருவை சேர்ந்தவர் பாடகர் அருண் மாதவன். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியின், "வாழும் கலை அமைப்பு' அறக்கட்டளையின் அறங்காவலர்.திருச்சி, பொன்மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட பாடகர் அருண் மாதவன், இளம் வயதில் இருந்தே, கிராமிய சூழலில் வாழ்ந்து, வளர்ந்ததால் இசை என்பது இயல்பிலேயே அவருக்கு அமைந்திருக்கிறது. 197576ம் ஆண்டுகளில், பாரத பிரதமரின் மாதிரி ஊரக வளர்ச்சி திட்டக்குழுவில் பணியாற்றியவர். இசை ஆர்வலராக, சிறந்த பாடகராக 20க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை தந்திருக்கிறார்.அருண் மாதவனின், "தேனமுதம்' ஆல்பம் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பரவலான பாராட்டை, பெற்றுள்ளது அவரது குரல் வளத்துக்கு கட்டியம் கூறுகிறது.கே.ஜி., பவுண்டேசன், "டைனமிக் இந்தியன் ஆப் த மில்லேனியம்' விருது, கற்பகம் பல்கலை "டாக்டரேட் ஆப் சயின்ஸ்' மற்றும் கர்நாடகா ஹாசன் அமைப்பின் "ராக சிகாமணி' விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.அவிநாசியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற, அருண் மாதவனை சந்தித்து பேசினோம்..
பக்தி இசைக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?
நல்ல வரவேற்பு உள்ளது; சங்கீதத்தில், ராக சிகிச்சை என்னவென்பதை, மக்கள் உணர துவங்கி விட்டனர். ராகங்களின் வாயிலாக, மனிதர்களின் நோய்களை, மன பாரத்தை குணப்படுத்த முடியும். தஞ்சையில் உள்ள ஓலைச்சுவடிகளில் இதற்கான ஆதாரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அந்த ஆதாரங்கள், நாளடைவில் காணாமல் போய்விட்டது. தியானத்தில் பாடும் பக்தி பஜனை பாடல்கள், மக்களை மகிழ்ச்சிபடுத்துகிறது. அவர்களுக்குள் மனவிடுதலை, நடக்கிறது. இது, விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இசையின் பரிணாம வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
பக்தி நிறைந்த பஜனை பாடல்களை பாடும்போது, மற்றவர்களையும் அதில் ஈடுபடுத்தி பாட வைக்கிறோம். அந்த பாடல்களால், அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். கலவையாக பாடும்போது, பாடல் அருமையானதாக வெளிப்படுகிறது. தனிமையில் பாடும்போது, அவர்களுக்குள் ஒரு தயக்கம் வந்துவிடுகிறது. இசையை பொருத்தவரை, ரசிக்கும் மனங்களை பொருத்தது. இசை, எந்த காலத்திலும் ரசிக்க வைக்கிறது.
ஆத்மாவை சுத்தப்படுத்தும் வலிமை, இசைக்கு உள்ளதா?
சரித்திர உண்மை, இசைக்கு வலிமை உள்ளதை உணர்த்துகிறது. அக்பர் அரசவையில், தான்சேன் என்ற இசை கலைஞன், "தீபக்' ராகம் பாடும்போது, அவர் பாடிய இடத்தில் தீ பற்றி எரிந்ததாக வரலாறு உள்ளது. ராகத்தின் வலிமை, அத்தகையது. மழை வருவதற்கு ராகங்கள் உண்டு. சோர்வை நீக்கவும், பயத்தை போக்கவும், ஒற்றுமை வளர்க்கவும் சங்கீதம் உள்ளது.· வசதியாக வாழ தெரிந்த மக்களுக்கு, அமைதியாக வாழ தெரியவில்லையே?அமைதி என்பது, வெளியே இல்லை. அது ஒவ்வொருவரின் மனதில் இருக்கிறது. இந்த உண்மையை உணராத வரை, தவிப்பும், தத்தளிப்பும் இருக்கும். மனதை தன் வசப்படுத்தி, கைக்குள் வைத்து கொள்ள வேண்டும். வாக்கு, எண்ணம், செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தால், வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்காது. முறையான தியான, யோக பயிற்சிகளை கற்று, மனதை தன் வயப்படுத்தி வைத்திருப்போர், அமைதியாக வாழ்கின்றனர்.
ஸ்ரீமத் ராமானுஜர் நூற்றாண்டு குறித்து...?
இந்த உலகில், 120 ஆண்டுகள் வாழ்ந்த மகான். அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள், பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், தத்துவங்களுக்கு அப்பாற்பட்டு மோட்ச நிலையை பெறும் வாய்ப்பு சாமானியனுக்கும் உண்டு, என்று உணர்த்தி காட்டிய உத்தமர். உலகம் போற்றும், ஒரு ஞானியின் நூற்றாண்டை அனைவரும் சிறப்பாக, கொண்டாட வேண்டும்.
No comments:
Post a Comment